Published Date: January 21, 2025
CATEGORY: EVENTS & CONFERENCES
சென்னை :
சங்க இலக்கியங்கள் உட்பட ஒரு லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் டிஜிட்டல் மின் நூலகத்தை 12 கோடி பேர் பார்வையிட்டு உள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய அங்கமாக இயங்கி வரும் தமிழ் இணைய கல்விக்கழகம் தமிழ் மொழியை டிஜிட்டல் காலகட்டத்துக்கு தடையின்றி தயார் செய்ய ஏதுவாக செயல்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.
இதன் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றான தமிழ் இணையம் மின் நூலகம், சங்க இலக்கியம், தமிழ் காப்பியங்கள் ,பக்தி இலக்கியங்கள், தமிழ் இலக்கணப் பிரதிகள் ,அகராதிகள், சொற்களஞ்சியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் ஆகியவற்றை உலகளவில் அனைவரும் எளிதில் அணுக வழிவகை செய்கிறது.
அந்த வகையில் உருவாக்கப்பட்ட மின் நூலகத்தின் https://www.tamildigitallibrary.in/இணையதளத்தில் ஒரு லட்சம் அரிய புத்தகங்கள், 8 லட்சம் ஓலை சுவடி பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என 12 கோடி பேர் இதுவரை பார்வையிட்டு உள்ளனர். இதில் 45,045 புத்தகங்களை 31.52 லட்சம் பேரும் 31,258 பருவ வெளியீடுகளை 2.49 லட்சம் பேரும் 3,739 ஓலைச்சுவடிகளை 1.99 லட்சம் பேரும் பதிவிறக்கம் செய்துள்ளன.
இதைத்தொடர்ந்து 6,974 புகைப்படங்கள் 800 மணி நேர ஒலி - ஒளி ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மின் நூலகத்தை பயன்படுத்தும் வகையில் ஈ-பப் , டெய்சி வடிவங்களில் (ஆடியோ புத்தகம்) கிடைக்க செய்வதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த மின்நூலகம் கன்னிமாரா பொது நூலகம் , அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற அமைப்புகளின் உதவியோடு தயார் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Media: Hindu Tamil